சட்டவிரோதமாக ஆற்று மணல் ஏற்றிய பாரவூர்தியை விடுவிப்பதற்கு இலஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டில் கைதான பொலிஸ் பொறுப்பதிகாரியை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.
மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியையே 25 ஆயிரம் ரூபா இலஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டில் எதிர்வரும் பெப்ரவரி 8 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.சி.றிஸ்வான் இன்று உத்தரவிட்டார்.
குறித்த பகுதியில் சட்டவிரோதமாக பாரவூர்தியில் ஆற்று மண் ஏற்றிக் கொண்டிருந்தபோது பொலிஸார் சுற்றிவளைத்துள்ளனர்.
இதன்போது பாரவூர்தியைக் கைவிட்டுவிட்டு பாரவூர்தி உரிமையாளர் உட்பட மண் ஏற்றியவர்கள் தப்பியோடினர்.
இதனையடுத்து பொலிஸார் பாரவூர்தியைக் கைப்பற்றி பொலிஸ் நிலையத்திற்கு எடுத்துச் சென்றனர்
இந்த நிலையில் பாரவூர்தி உரிமையாளர் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்து பாரவூர்தியை மீட்பதற்கு முயற்சித்தார்.
அவர்களிடம் 25 ஆயிரம் ரூபா பணத்தை இலஞ்சமாக தருமாறு பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி கோரியுள்ளார். பாரவூர்தி உரிமையாளர் இலஞ்ச ஊழல் மோசடிப் பிரிவுக்கு இதனை தெரிவித்துள்ளார்.
அதனடிப்படையில் நேற்று மாலை பாரவூர்தி உரிமையாளர் 25 ஆயிரம் ரூபாவுடன் பொலிஸ் நிலையத்திற்கு சென்று பணத்தை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியிடம் வழங்கியபோது இலஞ்ச ஊழல் மோசடிப் பிரிவினர் அவரைக் கைது செய்தனர்.
சம்பவத்தில் கைது செய்யப்பட்ட பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தியபோதே அவரை எதிர்வரும் 8 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.
0 comments:
Post a Comment