எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில், இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த 48 இந்திய படகுகளை தமிழகத்திலிருந்து வருகை தந்திருந்த குழுவினர் நேற்று மீட்டுச் சென்றனர்.
இலங்கை கடற்பரப்புக்குள் எல்லை தாண்டி மீன் பிடித்த குற்றச்சாட்டில் இந்திய மீனவர்கள் பலர் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டதுடன், அவர்களது படகுகளும் கைப்பற்றப்பட்டிருந்தன.
கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் 2018 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் மட்டும் இந்திய மீனவர்களின் 165 படகுகளை இலங்கை கடற்படையினர் கைப்பற்றினர்.
கைப்பற்றப்பட்ட படகுகள் நீதிமன்ற உத்தரவிற்கமைய தடுத்து வைக்கப்பட்டிருந்தன.
இரு நாடுகளுக்கும் இடையில் இடம்பெற்றிருந்த பேச்சுவார்த்தைகளுக்கு அமைய நல்லிணக்க அடிப்படையில் படகுகளை விடுவிப்பதற்கு இலங்கை அரசு இணக்கம் தெரிவித்திருந்தது.
இதற்கமைய படகுகளை மீட்பதற்கு தமிழகத்தின் இராமேஸ்வரம் மீனவ சங்கத் தலைவர் தலைமையில் படகு மீட்புக் குழுவினர், இலங்கைக்கு வருகை தந்திருந்தனர்.
கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் இலங்கை வந்த குறித்த குழுவினர் இரண்டு வாரங்கள் இலங்கையில் தங்கியிருந்து, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பல்வேறு இடங்களுக்கும் சென்று தடுத்து வைக்கப்பட்டிருக்கும் படகுகளைப் பார்வையிட்டுருந்தனர்.
இவ்வாறு தடுத்து வைக்கப்பட்டிருக்கும் 165 படகுகளில் 48 படகுகள் மாத்திரமே நல்ல நிலையில் இருப்பதை அவதானித்த அந்த குழுவினர் அவற்றை மீட்டுச் சென்றுள்ளனர்.
0 comments:
Post a Comment